Wednesday 3 April 2013

காரைக்குடியில் கம்பன் பவள விழா: ‘‘பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு தீமையும் நன்மையிலேயே முடியும்’’ வக்பு வாரிய முன்னாள் தலைவர் அப்துல் ரகுமான் பேச்சு

தினத்தந்தியில் வந்த கம்பன் திருநாள் முதல் நாள் பற்றிய நிகழ்ச்சிக்குறிப்பு


காரைக்குடி,
‘‘பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு தீமையும் நன்மையிலேயே முடியும்’’ என்று கம்பன் பவள விழாவில் முன்னாள் வக்புவாரிய தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்.
கம்பன் பவளவிழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் கம்பன் கழகம் சார்பில் 75–வது ஆண்டு கம்பன் திருநாள் பவளவிழாவாக நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா விழாவுக்கு கவிஞர் சரஸ்வதி ராமநாதன் தலைமை தாங்கினார். கம்பன் கழகச் செயலாளர் கம்பன் அடிசூடி வரவேற்றார். வக்புவாரிய முன்னாள் தலைவர் அப்துல்ரகுமான் தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:–
‘‘காரைக்குடியில் இயங்கி வரும் கம்பன் கழகம் பாரம்பரிய சிறப்புமிக்கது. தமிழகத்தில் யாரும் சாதித்திராத வகையில் 75 ஆண்டுகளாக கம்பன் விழாவை நடத்தி பவளவிழா கண்ட சிறப்புக்குரியதும், போற்றுதலுக்குரியதும் ஆகும். இந்த மேடையில் கவிதை பாட வாய்ப்பு கிட்டாதா என்று ஏங்கிய எனக்கு கவிதை பாடவும் வாய்ப்பு கிட்டியது. கவியரங்கத்தில் தலைவராகும் வாய்ப்பு கிட்டியது. தற்போது பவளவிழாவில் கலந்து கொள்ளவும், அதை தொடங்கி வைக்கும் சிறப்பும் எனக்கு கிட்டியது. நான் யாப்பிலக்கணத்தில் கற்றதைவிட கம்பனிடம் கற்று கொண்டதே அதிகம்.
புரட்சிகர அரசியல் கருத்து
பிற்காலத்தில் நாம் கண்ட அரசியல், சமுதாயம், உளவியல்ஆகியவற்றை அன்றே கூறியதுதான் கம்பனின் தனிச்சிறப்பு. இதனாலேயே கம்பன் கவிஞானியாகிறார். முடியாட்சி காலத்திலேயே மக்களாட்சி தத்துவத்தை எடுத்துக்கூறியவன், கம்பன். மக்கள்மீது அதிகம் நேசம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற புரட்சிகர அரசியல் கருத்துக்களை கூற இயலும்.
எந்த ஒரு தீமை ஏற்பட்டாலும், அது முடிவில் நன்மையையே கொண்டு வந்து சேர்க்கும். ராமாயாணத்தில் கூனி தோன்றியதால்தான் ராவண வதமே நடைபெற்றது. நல்லவளான கைகேயியின் மனம் கெட்டதால்தான் ராமன் அரசை துறந்து காட்டுக்குச் சென்றான். அங்கே அரக்கர் வதம் நடைபெற்றது. சீதை திருமணம் நடைபெற்றது. ராவணவதம் நடைபெற்றது. கிஷ்கிந்தையிலும், இலங்கையிலும் நடைபெற்ற நெறிதவறிய ஆட்சி அகற்றப்பட்டது. சீதையின் சிறப்பு புலப்பட்டது. லட்சுமணன், பரதன் பண்புநலன்கள் வெளிப்பட்டன. அனுமாரின் வீரம் வெளிவந்தது. எனவே இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒருதீமையும் நன்மையிலேயேமுடியும்.’’ இவ்வாறு அவர் பேசினார்.
நூல் வெளியீடு
விழாவில், பேராசிரியர் சேதுபதி எழுதிய ‘‘காலத்தின் சாட்சியம் கம்பனின் அடிப்பொடி’’ என்ற நூலை, புதுவை மைய பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுடைநம்பி வெளியிட, கோவை கம்பன் கழகத்தின் செயலாளர் நஞ்சுண்டன் பெற்றுக் கொண்டார். தமிழ்த்துறை திருமுறைகள் பன்னிரெண்டையும் உலகமொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்த வரவன்புலவு சச்சிதானந்தனைப் பாராட்டி, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிகர் பேசினார். இவ்விழா வருகிற 27–ந்தேதி வரை நடைபெறுகிறது

No comments:

Post a Comment