Sunday 7 April 2013

நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்

நீதி பரிபாலனம் செய்பவர்கள் ஆட்சியாளருக்கு அச்சப்படக் கூடாது

By காரைக்குடி,
First Published : 24 March 2013 04:05 AM IST
நீதி பரிபாலனம் செய்பவர்கள் ஆட்சியாளருக்கு அச்சப்படக் கூடாது என்ற கருத்தை கம்பன் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு விழாவின் 3ஆம் நாள் நிகழ்வான சனிக்கிழமை, கம்பன் தமிழ் ஆய்வு மையத்தைத் தொடக்கிவைத்தும், "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்ப ராமாயண உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கை தொடக்கிவைத்தும் அவர் பேசியது:
காரைக்குடியை கவிக்குடியாக மாற்றிய பெருமை கம்பன் அடிப்பொடி சா. கணேசனுக்கு உண்டு. கம்பரசம் பரப்பியவர். "கம்பனை கேலி செய்வதற்காகப் படிக்கத் தொடங்கினேன். ஆனால், கம்பன் என்னை கேலி செய்யத் தொடங்கினான்' என்று சொல்வார் கவியரசர் கண்ணதாசன்.
கம்பன் கழகத்தை பெரும் இயக்கமாகவே தோற்றுவித்தவர் சா.கணேசன். அவர் 1981ஆம் ஆண்டில் என்னை ஒரு மாணாக்கனாக இந்த மேடையில் பேச வைத்தார். இன்று கம்பன் ஆய்வு மையத்தை தொடக்கிவைக்கும் பெருமையை நான் பெற்றுள்ளேன்.
இந்த மேடையில் கம்பன் சொன்ன அறத்தைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலர் எழுதியிருக்கிறார்கள். புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் முருகேசன், "கம்பன் ஒரு நீதியரசர்' என்ற நூலை எழுதியிருக்கிறார். ஆனால், நீதிமான்களைப் பற்றியும், நீதி நிர்வாகம் பற்றியும் கம்பன் ஏதாகிலும் சொல்லியிருக்கிறானா, ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் அந்தக் கோணத்தில் நான் கம்பனைப் பார்க்கிறேன். சட்டம் வேறு, நீதி வேறு.
அதனால்தான் அமைச்சகத்தில் சட்டம் மற்றும் நீதித் துறை என்று குறிப்பிடப்படுகிறது. சட்டத்துக்குள் நீதி அடங்கி விடாது. இதை கம்பன் கையாண்டிருக்கிற பாடல்களில் நான் பார்த்தேன். கம்பன் வாழ்ந்த காலத்தில், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் சட்டத்தையும், நீதியையும் நிர்வகிக்க வேண்டிய கடமை மன்னருக்கும் இருந்திருக்கிறது, அமைச்சர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதைப் பல்வேறு பாடல்களிலே கோடிட்டுக் காட்டுகிறார். ஒரு மன்னனுக்கு 8 குணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கம்பன் எடுத்துக் காட்டுகிறார்.
இனிய சொல் கூறல், தானம் செய்தல், ஆராய்தல், முயற்சி செய்தல், சீர்மை செய்தல், தீமை விலக்கல், வெற்றியளித்தல், நீதி நெறி படைத்தல் என மன்னனின் குணங்களாக அவர் கூறுகிறார்.
அதிலும் நீதி நெறி படைத்தலை அயோத்தியா காண்டத்தில், மந்தரை சூழ்ச்சி படலத்தில், கம்பன் தமது பாடல் வரியில் பரதன் தனது தந்தை மறைவை, நீதி நெறி இழந்து தவிக்கிறாயோ என்று கூறுவது போன்று அமைத்திருக்கிறார். இதிலிருந்து நீதி தவறாமை மன்னனுக்கு உண்டு என்பது தெரியவருகிறது.
எனவே, நீதியும், சட்டமும் மன்னனுக்கும் அமைச்சருக்கும் உண்டு என்பது கம்பனின் ஒரு பதிவு.
கம்பன் பாடல்களில் நீதிமான் குணங்களையும் கூறுகிறார். நீதி பரிபாலனம் செய்பவர்கள் ஆட்சியாளருக்கு அச்சப்படக் கூடாது என்கிற கருத்தையும் கூறியிருக்கிறான். நீதி தவறாது என்று சொல்லும்போது, தராசு முள்ளானது எடையில் தட்டு இழைக்கும் தவறைக்கூட ஏற்றுக்கொள்ளாது.
அளவிலே பெரிய பொருள்கள் விலை குறைவாக இருந்தும் பொருள் சுமார் என்கிற அளவு வந்தால் கூட, எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், அளவிலே சிறியதாகவும், விலையிலே அதிகமாகவும் உள்ள பொருளை, குறிப்பாக தங்கத்தை நிறுக்க வேண்டிய தராசு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். கம்பன் இதை உணர்ந்து கொண்டிருக்கிறான்.
அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறபோது, தங்கத்தை நிறுக்கப் பயன்படும் தராசு போன்று இருக்க வேண்டும் என்கிறான். இப்படி நீதி பரிபாலனம் பற்றி கம்பன் எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றார் நீதிபதி இராமசுப்பிரமணியன்.

கம்பனில் ஆளுமை

கம்பனில் ஆளுமை 

மகேஸ்வரி சற்குரு

            யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
            பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை – பாரதி 
   
    கம்பனில் ஆளுமையா, கம்பனே ஆளுமையா என்கின்ற கேள்வி எழுமானால் இரண்டுமே மிக சரி. ஒருவன் இருக்கின்ற காலத்து அவனைப் பற்றி பேசுவதைவிட அவன் இருந்த இடம் அவன் படைப்புகளால் நிரப்பப்பட்டு அவனுடைய காலத்திற்கு பின்பு அதிகம் பேசப்படுமானால் அதுவே அந்த மனிதனின் ஆளுமை. அவன் படைப்பின் ஆளுமை. கம்பனது கவியின் ஆளுமைத் தன்மையால் உந்தப்பட்டு உயிர்த்தெழுந்த கவிஞர்கள் உண்டு. இனங்கானப்படுகின்ற எடுத்துக்காட்டு கவியரசு கண்ணதாசன் இதன் காரணமாக இறுமாந்து சொன்னான் ' காலமெனும் ஆழியிலும் காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு".
ஆளுமைத்தன்மை என்றால்……..
    ஒருவனை தனிப்பட்ட சிறப்புடைய மனிதனாகச் செய்யும் தன்மைகளின் முழுமையை ஆளுமையென்று சொல்லாம். ஆளுமைக்கான அளவீடுகள்: (1)உடல் அமைப்பு, (2)ஆற்றல்கள், (3)திறமைகள், (4)நடத்தையில் நாம் பார்க்கக்கூடிய மனநிலை இவை வெளிப்படையான அம்சம். உந்தல்கள், தன்னை உணர்தல், உணர்வதில் அடங்கியுள்ள எண்ணங்கள், உணர்ச்சி, மனப்போக்கு, சிந்தனைகள், செயல்கள், ஆதிக்கம் செலுத்தும் உணரப்படாத நனவிலியான போக்குகள் இவை அனைத்தும் உட்புற அம்சம்;. புறத்தோற்றத்தில் காணப்படுவது அகத்தின் எதிரொலி, அகத்தில் இல்லாதவை புறத்தில் இல்லை. அனுபவங்களைக் கொண்டு தான் உள்ளம் அறிவைப் பெறுகின்றது. உடலியக்கமும், உள்ளஇயக்கமும் பின்னிப் பிணைந்தது (சிக்மண்ட் பிராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல் - தி.கு.ரவிச்சந்திரன்) 
    உளவியலார்களின் கூற்றுப்படி மனிதனின் ஆளுமை எல்லையற்றது. நடத்தைகளோடு தொடர்புடையது, வண்ணம் போன்றது. அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட வண்ணத்தைக் கொண்டிருப்பது போன்று ஒவ்வொரு மனிதனிடத்தும் குறிப்பிட்ட ஆளுமை உண்டு. பழகும் விதங்கள், செயற்பாடுகள், அனுபவங்கள் கொண்டு ஆளுமையை வரையறுக்க முடியும். ஒருவனிடத்தில் அமையப் பெறுகின்ற ஆளுமையை சமூகத்திடம் தொடர்புப் படுத்திப்பார்ப்பதால் மட்டுமே விளங்கிக் கொள்ளமுடியும். நனவுகளே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது. இது பின்னனிகளுக்கேற்ப மாறுபடும். உள்ள ஆற்றல், ஆளுமை வளர்ச்சி, ஆளுமை அமைப்பு, ஆளுமை கட்டமைப்பு, ஆளுமை பண்பு இவைதான் ஆளுமையின் சாராம்சம். தனிநபர் வரலாற்றில் ஒவ்வொரு கட்டங்களிலும் ஆளுமை பண்புகள் உருவாகின்றன.
    உள்ளத்தில் பொங்கிய கவியாற்றலை சமூகத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற போது, சமூக கட்டமைப்புக்காகத் தருகின்ற போக்கினைக் கொண்டும், கம்பனே ஆளுமையான அதிசயத்தைக் காண்போம். கம்பனின் ஆளுமைத்தன்மை அவனது காப்பியத்திலும், உருவத்திலும் இருப்பது கண்கூடு. உள்ளத்தால் உயர்ந்தபின், கவிதந்தான், விசுவரூபம் எடுத்தான், ஒளிர்கின்ற கண்கள், மிளிர்கின்ற இரத்தினக்கடுக்கண், கூர்மூக்கு, செதுக்கிய மீசை, கவிதையை ஆடையாகக் கொண்டு நிற்கின்றத் தோற்றத்தில் கம்பனைப் பார்த்தாலே பரவசப்படுத்தும் பிரமிப்பாகும். இதுவும் ஆளுமையின் மறுவெளிப்பாடாகும்.
ஆளுமை வளர்ச்சி
    கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் ஆளுமைத் தன்மையில் சளைத்தவர்கள் அல்ல. சுற்றிலும் நடக்கின்றதைக் கண்ணுற்றும், பேசுவதைக் கேட்டும், உள்ளம் தன்னைத்தானே மெருகேற்றுவது முதல்படி. அயோத்தி மாநகரின் பல இடங்களைச் சுற்றிதிரிந்துவிட்டு அரண்மனை திரும்புகிறான் சிறுவன் இராமன். எதிர்படுபவர்களை என்ன தொழில் செய்கிறாய்? நீ நலமா? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? இதில் முதல் கேள்வி தொழில் பற்றியது. இதில் நாட்டின் நிலைத் தெரிந்துவிடும். தொழிலுக்கு ஒழுங்காகச் சென்றால் உடல்நிலை நன்றாக இருக்கும். சோம்பல் மிகாது. எனவே அடுத்த கேள்வி நீங்கள் நன்றாக இருக்கிறார்களா? தொழிலும் குடும்பத்தலைவனும் நன்றாக இருந்தால் மனைவியும், குழந்தைகளும் நன்றாக இருப்பர். 'மதிதரு குமரர்" என்கிற சொல்லாடலில் நல்ல குடும்பத்து பிள்ளைகள் அறிவாற்றல் மிகுந்து காணப்படுவர் என்பதற்கிணங்க கேள்வி கேட்கிறான். எதிர்காலத்தில் மிகப் பெரும் சக்கரவர்த்தியாகப் போகும் ராமனது முன்னோட்டக் கேள்வி இது. முதிர்தரு கருணை என்கின்ற வினைத்தொகையை (முக்காலம்) கையாள்கிறான்.
    'எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
     முதிர்தரும் கருணையின் முகமலர் ஒளிர,
     ஏதுவினை? இடர் இலை? இனிது நும் மனையும்
     மதிதரு குமரரும் வலியர்கொல்" (க.ரா.311)
குருகுலத்திலும், வெளியிடங்களிலும் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்துவது இராமனது ஆளுமை வளர்ச்சியாகக் கொள்ளலாம். அனுபவங்கள் தான் மனிதனின் ஆளுமை வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் படிக்கட்டுகளாக இருக்கின்றன.
ஆளுமை அமைப்பு
    மிகப்பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரம் ஆளுமை அமைப்பு. செயல் செய்வதற்கு முன்பு சற்றே யோசித்தல், பின் விளைவுகளை தொலைநோக்குப் பார்வையில் பார்த்தல், அளவிடல், அவசியப்பட்டால் பிறரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்தல், குழப்பமற்ற மனோபாவத்துடன் செயல்படுவதற்கு தன்னை தயார்ப்படுத்துதல் என்று அடுக்கிக்கொண்டு செல்லலாம். தாடகை வதத்தின்போது பெண் என்று யோசிக்கின்றான் பெருங்குணத்தவன் இராமன். பின்பு விசுவாமித்திரர் சொல்வதைக் கேட்டு தாடகையைக் கொல்கின்றான்.
    'பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்" (க.ரா.374)
நடையில் நின்று உயர் நாயகனாக இராமன் பரிணமிப்பதற்கு வலிமையான காரணி ஆளுமை அமைப்பே.
ஆளுமை பண்புகள்
    1)முடிவெடுக்கும் திறன், 2)நேர்மறை எண்ணங்கள், 3)தகவல் பரிமாற்றத்திறன், 4)நேரத்தைக் கையாளுதல் இவை நான்கும் வேதங்களைப் போன்றது.
முடிவெடுக்கும் திறன்
    இராமன் காட்டுக்குச் செல்வதற்கு தயாராகிறான். நீ இங்கேயே இரு, நான் போகிறேன் என்றவுடன், வெகுண்டு எழுகிறாள் பெருமாட்டி சீதை, என்னை விலக்குவது எந்தவகையில் சரி? உனது பிரிவுக் கொடுமையால் மனம்கொதிப்பதைவிடவா, காடு என்னைச்சுடும் என்ற வினாவை எழுப்புகிறாள்.
    'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு" (க.ரா.1827)
நின் என்கிற சொல்லை கம்பன் அழுத்தி உரைக்கின்றான். அகமனை புகுகின்றாள், காடுரை வாழ்க்கைக்கான மரஉரி தரிக்கின்றாள், வா போகலாம் என்று நாயகன் இராமன் கையைப் பிடிக்கின்றாள். இந்த முடிவெடுக்கும் திறன் தான் காப்பியத்தின் மிகப்பெரிய திறவுகோல்.
    'அகமனையை எய்தினள் புனையும் சீரம்
    துணிந்து புனைந்தனள்" (க.ரா.1829)
இதனாலேயே ஏற்றம் பெற்றாள் சீதை.
நேர்மறை எண்ணங்கள் 
   இன்றைய காலக்கட்டத்தில் சுயமுன்னேற்ற வல்லுநர்கள் அனைவரும் பயிலரங்கத்தில் கையாளுகின்ற வித்தைச் சொல் இது. நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே கொண்டிருக்கும் போது வாழ்க்கை வசந்தமாகிறது. குகனை, பரதன் கோசலைக்கு அறிமுகம் செய்கின்ற பொழுது புன்முறுவலுடன், 'மகனே, இராமன் காட்டிற்கு வந்தது நலமேயாயிற்று. குகனுடன் இணைந்து நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக உலகத்தை ஆள்வீர்களாக" என்று ஆசீர்வதிக்கிறாள் ஆற்றல் சால் கோசலை.
    'நைவீர் அவீர் மைந்தீர்" …. (க.ரா.2368)
தகவல் பரிமாற்றத்திறன்
    தகவல் தொடர்பில் உலகம் எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது. தகவலை தெரிவிப்பத்தில் ஒரு நேர்த்தியும், புரிதலும் இருந்தால் தான் அவர்கள் சிறக்க முடியும். இந்திய இளைஞர்கள் இதில் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக தமிழர்கள். இதற்கு காரணம் கம்பன் என்றால் மிகையல்ல. சொல்லின் செல்வன் அனுமன், சொல்லின் செல்வி தாரை இருவரையும் சொல்லலாம். அனுமன், சீதாப்பிராட்டியை தேடி அலைந்து, இலங்கையில் கண்டபிறகு இராமனிடம் சொல்ல வருகிறான். பிராட்டியிருந்த தெற்கு திசை நோக்கி வணங்கி குறிப்பால் உணர்த்துகிறான். பிராட்டியை… என்று ஆரம்பித்தால் இராமன் யோசிப்பானோ என நினைந்து தெளிவாக, உறுதியாக, கண்டனன் - எங்கே? எப்படி? என்று ஆரம்பிக்கிறான்.
    'கண்டனன் கற்பினுக்கு அணியை"…. (க.ரா.சு.கா.1307)
சொல்லின் செல்வி தாரையைப் பார்க்கலாம். கார்காலம் நீங்கியும் சுக்ரீவன் வரவில்லையே என்று கோபத்துடன் வருகிறான் இலக்குவன். அனைவரும் நடுங்குகின்றனர். விரைவில் முடிவெடுத்த தாரை, இலக்குவனிடம் நான் பேசுகிறேன் என்கிறாள்.
    'அயல் நீங்குமின்…." (க.பா.கி.கா.615)
    'ஐய நீ ஆழிவேந்தன்…" (க.ரா.கி.கா.622)
அண்ணனைவிட்டு பிரியமாட்டாயே, எதற்காக வந்தாய்யப்பா?" என்று வினவுகிறாள் இசையினும் இனிய சொல்லால்…. மென்மையாக பேசுவது யுக்தியாகும். இது தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாகும்.
நேரத்தைக் கையாளுதல் (வுiஅந ஆயயெபநஅநவெ)
    பிரமாத்திரத்தால் இலக்குவனும் வானரப்படைகளும் இறந்துபோனது போல் மயங்கிக்கிடக்க அனுமனை சஞ்சீவி மூலிகைகள் கொணருமாறு சாம்பவான் அனுப்புகிறார். மேருமலையைக் கடந்து மருந்துமலையைப் பார்க்கிறான். சஞ்சீவி மூலிகைகளை தேடினால் நேரம் வீணாகும் என்று கருதி மலையைத் தூக்கிக் கொண்டுவருகிறான். 'நேரம் கண்டு செய்தல்" என்ற வழிமொழிக்கேற்ப செய்கின்றான். 'இங்கு நின்று இன்னமருந்து என்று எண்ணினால் சிங்கும் ஆல் காலம் என்று உணர்ந்த சிந்தையான்"
ஆளுமைக்கட்டமைப்பு
    நிறைவாக, சிக்கல்கள் இல்லாத தன்மையுடன் பிரச்சனையைக் கையாளுகின்ற தன்மை வருகின்ற பொழுது ஒருவன் நிறைவான ஆளுமைத்தன்மையாளன் ஆகின்றான். இதனை தலைமைப் பண்பு என்று சொல்லலாம். படிப்படியாக வளர்ந்;து பலநிலைகளைக் கடந்து தலைவனாகிறான். சான்றாண்மை, பேராண்மை, இறையாண்மை என்கின்ற மிகப்பெரும் தன்மைகளை இராமன் பெறுகின்றான்.    இலக்குவனிடம் அன்பைக் காட்டுகின்ற பொழுது சான்றாண்மையையும், நிராயுதபாணியாக நிற்கின்ற இராவணனை இன்று போய் நாளை வா என்கிற பொழுது பேராண்மையையும், அனுமனின் பக்தியில் உருகி என்னைப் பொருந்துரப் புல்லுக என்கிற பொழுது இறையாண்மையையும் காட்டு;கின்றான் இராமன்.
    ஆளுமைத்தன்மைகளை உள்ளடக்கிய அதிசய ஆளுமைப் பெட்டகம் கம்பராமாயணம். இளைய சமுதாயத்தின் உந்து சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும், மகிழ்வு சக்தியாகவும் இருப்பவன் கம்பனே.       

Friday 5 April 2013

கைகேயியின் பாத்திரத்துக்கு தனிச் சிறப்புண்டு


By 'காரைக்குடி,
First Published : 27 March 2013 01:15 AM IST
ராமாயணத்தில் கைகேயியின் பாத்திரத்துக்கு தனிச்  சிறப்புண்டு என்று பேராசிரியர் சொ.சேதுபதி தெரிவித்தார்.
 காரைக்குடியில் கம்பன் கழக 75-ஆம் ஆண்டு விழாவில்,  'ராமனின் பெருந்தகைமை பெரிதும் வெளிப்படுவது-கைகேயியிடத்திலே, வாலியிடத்திலே, ராவணனிடத்திலே' என்ற தலைப்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பொறுப்பேற்றார்.
 கைகேயியிடத்திலே, வாலியிடத்திலே, ராவணனிடத்திலே என்று மூன்று அணியினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதில் கைகேயியிடத்திலே... என்ற அணிக்குத் தலைமை வகித்துப் பேசிய சொ.சேதுபதி இவ்வாறு கூறினார்.
கைகேயியிடத்திலே... என்ற அணியின் தலைவர் பேராசிரியர் சொ. சேதுபதி: கைகேயியின் பாத்திரத்துக்கு தனிச் சிறப்புண்டு, எல்லாச் சிறப்பும் கொண்ட மகனது பெருமிதத்தை ஒரு குடத்துக்குள் இருக்கிற விளக்குப்போல அடக்கிவிடக் கூடாது என்பதும், அவனை உயர்த்தும்படியான ஊழ்வினையும் கைகேயியின் பெருந்தகைமையை வெளியே கொண்டு வருகிறது. வலியைத் தாங்கிக் கொள்கிறபோது உனக்கு வலிமை என்று, தன் நிலையிலிருந்து ராமனுக்கு கைகேயி உணர்த்துகிறாள்.
  ராமனைக் காட்டுக்கு அனுப்புவதில் பேரரசியான கைகேயிக்கு பின்னால் கூனி இருப்பது மட்டும் காரணமல்ல. தந்தைக்குப் பின்னர் தனயன்தான் நாட்டை ஆள வேண்டும் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று உலகத்துக்கு உணர்த்துவதற்கான செய்தியும் உள்ளது.
   இந்த உலகம் பயன்பெறுவதற்கு ராமனைக் காட்டுவதற்காக படைக்கப்பட்டவள் நான் என்று சொல்லிவிட்டு, தன் உள்ளத்திலே ராமன் மீது இருக்கிற அன்பைத் துறந்துதான் காட்டுக்கு அனுப்பத் தயார்படுத்துகிறாள். அதனை மறுக்காமல் மலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் ராமன் முன்வருவான் என்பதை கம்பன் காவியத்தில் காட்டியிருப்பது ராமனின் பெருந்தகைமை கையியிடத்திலேதான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.
    அவருக்கு வலுச் சேர்க்கும் விதமாக இரண்டாவது சுற்றில், மகேஸ்வரி சற்குரு வைத்த வாதத்தில், ராமன் முடிசூட்டிக் கொள்வதைத் தடுத்து துன்பம் தரும் காட்டுக்கு அனுப்பிய அந்தத் தாயைக்கூட தெய்வம் என்று போற்றியவன் ராமன் என்றும்,
  மூன்றாவது சுற்றில் மெ. ஜெயங்கொண்டான் வைத்த வாதத்தில், இன்றைய சூழ்நிலையில் அம்மா கடைக்குப் போ என்று சொன்னால் போகாதா பிள்ளைகள் இருக்கிறார்களே.. ஆனால், ராமனோ தாய் காட்டுக்குப் போ என்று சொன்னதும் மலர்ந்த முகத்துடன் சென்றதுதான் அவனது பெருந்தகைமையைக் காட்டுகிறது எனவும் அணிக்கு வலுச் சேர்த்தனர்.
வாலியிடத்திலே..என்ற அணியின் தலைவர் மு. பழனியப்பன் முன்வைத்த வாதம், ராமனுக்கு உறவு கைகேயி, எதிரி ராவணன். ரெண்டும் கெட்டான் என்று முன்னர் பேசிய அணியின் தலைவரே சொல்லிவிட்டார். பெருந்தகைமை உறவிடமோ, எதிரியி டமோ எப்படி வரும். வாலியின் கதாபாத்திரம் மிக அழகானது. வாலி சண்டைக்கு அழைக்கப்படுகிறான் மனைவி தடுக்கிறாள். அரசே! ராமன் என்பவன் உயிர் கோடெ டுக்க வந்திருக்கிறான். அவன் மகா சக்கரவர்த்தி என்று எச்சரிக்கிறாள்.
  ஆனால், ராமனைக் காணாமலே வாலி அவன்மீது பக்தியும், அன்பும் கொண்டுவிட்டான். அரச பதவியைத் துறந்துவந்தவன் ராமன். இன்னொருவனின் அரச பதவியைக் கெடுக்க மாட்டான் என்று வாலி மனைவிக்குத் தெளிவுபடுத்துகிறான். போருக்குச் செல்வதற்கு முன்னரே ராமனை வாலி தெரிந்திருக்கிறான். அதனால் ராமனின் பெருந்தகைமை பெற்றிருக்கிறான் வாலி.
  தன்மீது அம்பு பாய்ந்ததும் வாலி ராமனிடத்திலே நான் உனக்கு எதிரியில்லையே என்மீது ஏன் அம்பு எய்தினாய் என்கிற கேள்விக்கு, அடுத்தவன் மனைவியைக் கவர்ந்துவிட்டாயே என்கிறான் ராமன். வாலியோ நான் விலங்கினம். எங்களுக்கு திருமணம் என்பதெல்லாம் ஏது என்று வாலி கூறியதைக் கேட்ட ராமன், நீ குரங்கினத்திலிருந்து அடுத்த நிலையான மனித நிலைக்கு உயந்திருக்கிறாய் நீ தெய்வ நிலைக்கு வர வேண்டும் என்றே ராமனின் பெருந்தகைமை வாலியை உயர்த்துகிறது என்று குறிப்பிட்டார்.
   அவருக்கு வலுச் சேர்க்கும் விதமாக 2-வது சுற்றில் இரா. ராமசாமி, வாலியின் மீது அம்பு பாய்ந்த அந்த நிலையிலும், ராமநாமம் சொல்லி அன்பு பாராட்டியது கண்டு ராமன் துடித்தானே, தவிக்கிறானே இது ஒன்று போதுமே ராமனின் பெருந்தகைமை வாலியிடத்தில் இருந்ததற்கு என்றும், 3-வது சுற்றில் சித்ரா சுப்பிரமணியன், ராமனைப் பற்றி வாலியின் மனதில் உயர்வான எண்ணம் இருக்கிறது. நாட்டைக் காப்பற்ற உயிரை பலி கொடுப்பது தவறல்ல என்று தன்மேல் ஏற்றுக்கொண்டு நிற்கிறான் வாலி. ராமன் அம்பு வாலி மீது பாய்கிறது. அந்த வாளைப் பிடித்துக் கொண்ட வாலி, ராம நாமத்தை தன் கண்களில் தெரியக் கண்டான். வாலியின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில், ராமன் வாலியை மனமாற்றம் செய்யவைத்து முக்தி தந்து உணர வைக்கின்றான். 
 ராவணனிடத்திலே.. என்ற அணியின் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்வைத்த வாதம், ராமனை வெல்வதற்கு இணையான வீரம் செறிந்தவன் யார் என்று கேட்டால் ராவணன்தான். தன் மனைவியை அடைய நினைத்த ராவணன் போர்க்களத்தில் ஆயு தங்கள் இழந்து நின்றபோது, உடனே அவனை அழித்துவிட நினைக்காத ராமன் இன்று போய் நாளை வா என்கிறானே... அப்போ ராமனின் பெருந்தகைமையை ராவணன் பெற்றதினால்தானே.
  2-வது சுற்றில் ராம.  மணிமேகலை... ராவணனைக் கொல்ல நினைக்காமல், சீதையை விடுவித்து விடு, உன் தம்பி வீடணனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு என்று ராமன் கூறுகிறான். ஆனால், எதையும் ஏற்காமல் ராவணன் ராமனுடன் போர் புரிகிறான். போரில் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றபோதும் அறிவுரையும், அறவுரையும் கூறுகின்ற இடம் போர்க்களமன்று என்று தெரிந்தும், ராவணனைப் பார்த்து, இன்று போய் நாளை வா என்று சொன்னதும், அவன்மீது இரக்கம் காட்டியதும்தான் ராமனின் பெருந்தகைமைக்குக் காரணம் என்றார்.
 3-வது சுற்றில் ந. சேஷாத்ரி ... தனிமனித ஒழுக்கத்திலிருந்து தவறிய ராவணனை போர்களத்திலே நிராயுதபாணி நிலையிலும், அவனை இன்றுபோய் நாளை வா என்று சொன்னதும் வீடணனிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொன்னதும் ராவணனிடத்திலே ராமனின் பெருந்தகைமை வெளிப்படுகிறது என்றார்.

கம்பன் கழகப் பவளவிழா நிகழ்ச்சிகள்


கம்பநாட்டுப் பாராளுமன்றத்தில்... குகனுக்கு "பரிவால் மிக்க பண்பாளர்' விருது
By காரைக்குடி
First Published : 28 March 2013 09:31 AM IST
காரைக்குடியில் நடைபெற்ற கம்பநாட்டுப் பாராளுமன்றம் பவள விழா சிறப்புக் கூட்டத்தில், பரிவால் மிக்க பண்பாளராக குகனை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 75 ஆம் ஆண்டு பவளவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந் நிகழ்ச்சியை பேராசிரியர் அய்க்கண் தொடக்கி வைத்தார். சுழற்சங்க முன்னாள் ஆளுநர் எஸ். பெரியணன் கம்பன் அடிப்பொடி அஞ்சலி வழங்கினார்.
 அதைத் தொடர்ந்து, கம்ப நாட்டுப் பாராளுமன்ற பவள விழா சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகராக பேராசிரியர் தி. ராசகோபாலன், பாராளுமன்றச் செயலராக பேராசிரியர் சொ. சேதுபதி ஆகியோர் இருந்தனர். 
நிகழ்ச்சியைத் துவக்கிவைத்துப் பேசிய தி.ராசகோபாலன், இது கவிச் சக்கரவர்த்தி கம்பனுடைய பாராளுமன்றம். கம்பன் அடிப்பொடி சா.கணேசன், கி.வா.ஜ. போன்றோரால் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
பரிவால் மிக்க பண்பாளர் குகனா, கும்பகர்ணனா, சடாயுவா என்பது தனித் தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குகனே என, ஆளுங்கட்சி சார்பில் பேராசிரியர் த.ராமலிங்கம், திருச்சி இரா.மாது, புதுக்கோட்டை பாரதி பாபு ஆகியோர் பேசினர்.
கும்பகர்ணனே என, எதிர்க்கட்சி சார்பில் இலங்கை ஜெயராஜ், மு.பழனியப்பன், சித்ரா சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
சடாயுவே என, சுயேச்சை உறுப்பினர்களாக ஸ்ரீரங்கம் ந.விஜயசுந்தரி, ஜெயங்கொண்டான் ஆகியோர் பேசினர். இறுதியில், குகனே பரிவால் மிக்க பண்பாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 

Wednesday 3 April 2013

காரைக்குடியில் கம்பன் பவள விழா: ‘‘பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு தீமையும் நன்மையிலேயே முடியும்’’ வக்பு வாரிய முன்னாள் தலைவர் அப்துல் ரகுமான் பேச்சு

தினத்தந்தியில் வந்த கம்பன் திருநாள் முதல் நாள் பற்றிய நிகழ்ச்சிக்குறிப்பு


காரைக்குடி,
‘‘பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு தீமையும் நன்மையிலேயே முடியும்’’ என்று கம்பன் பவள விழாவில் முன்னாள் வக்புவாரிய தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்.
கம்பன் பவளவிழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் கம்பன் கழகம் சார்பில் 75–வது ஆண்டு கம்பன் திருநாள் பவளவிழாவாக நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா விழாவுக்கு கவிஞர் சரஸ்வதி ராமநாதன் தலைமை தாங்கினார். கம்பன் கழகச் செயலாளர் கம்பன் அடிசூடி வரவேற்றார். வக்புவாரிய முன்னாள் தலைவர் அப்துல்ரகுமான் தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:–
‘‘காரைக்குடியில் இயங்கி வரும் கம்பன் கழகம் பாரம்பரிய சிறப்புமிக்கது. தமிழகத்தில் யாரும் சாதித்திராத வகையில் 75 ஆண்டுகளாக கம்பன் விழாவை நடத்தி பவளவிழா கண்ட சிறப்புக்குரியதும், போற்றுதலுக்குரியதும் ஆகும். இந்த மேடையில் கவிதை பாட வாய்ப்பு கிட்டாதா என்று ஏங்கிய எனக்கு கவிதை பாடவும் வாய்ப்பு கிட்டியது. கவியரங்கத்தில் தலைவராகும் வாய்ப்பு கிட்டியது. தற்போது பவளவிழாவில் கலந்து கொள்ளவும், அதை தொடங்கி வைக்கும் சிறப்பும் எனக்கு கிட்டியது. நான் யாப்பிலக்கணத்தில் கற்றதைவிட கம்பனிடம் கற்று கொண்டதே அதிகம்.
புரட்சிகர அரசியல் கருத்து
பிற்காலத்தில் நாம் கண்ட அரசியல், சமுதாயம், உளவியல்ஆகியவற்றை அன்றே கூறியதுதான் கம்பனின் தனிச்சிறப்பு. இதனாலேயே கம்பன் கவிஞானியாகிறார். முடியாட்சி காலத்திலேயே மக்களாட்சி தத்துவத்தை எடுத்துக்கூறியவன், கம்பன். மக்கள்மீது அதிகம் நேசம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற புரட்சிகர அரசியல் கருத்துக்களை கூற இயலும்.
எந்த ஒரு தீமை ஏற்பட்டாலும், அது முடிவில் நன்மையையே கொண்டு வந்து சேர்க்கும். ராமாயாணத்தில் கூனி தோன்றியதால்தான் ராவண வதமே நடைபெற்றது. நல்லவளான கைகேயியின் மனம் கெட்டதால்தான் ராமன் அரசை துறந்து காட்டுக்குச் சென்றான். அங்கே அரக்கர் வதம் நடைபெற்றது. சீதை திருமணம் நடைபெற்றது. ராவணவதம் நடைபெற்றது. கிஷ்கிந்தையிலும், இலங்கையிலும் நடைபெற்ற நெறிதவறிய ஆட்சி அகற்றப்பட்டது. சீதையின் சிறப்பு புலப்பட்டது. லட்சுமணன், பரதன் பண்புநலன்கள் வெளிப்பட்டன. அனுமாரின் வீரம் வெளிவந்தது. எனவே இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒருதீமையும் நன்மையிலேயேமுடியும்.’’ இவ்வாறு அவர் பேசினார்.
நூல் வெளியீடு
விழாவில், பேராசிரியர் சேதுபதி எழுதிய ‘‘காலத்தின் சாட்சியம் கம்பனின் அடிப்பொடி’’ என்ற நூலை, புதுவை மைய பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுடைநம்பி வெளியிட, கோவை கம்பன் கழகத்தின் செயலாளர் நஞ்சுண்டன் பெற்றுக் கொண்டார். தமிழ்த்துறை திருமுறைகள் பன்னிரெண்டையும் உலகமொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்த வரவன்புலவு சச்சிதானந்தனைப் பாராட்டி, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிகர் பேசினார். இவ்விழா வருகிற 27–ந்தேதி வரை நடைபெறுகிறது